கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 5 –
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், (மின்னனு தேசிய வேளாண் சந்தை) மூலம் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பாக செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், e-NAM திட்டம் 2023 முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2023 முதல் ஜூலை-2025 மாதம் வரை e-NAM திட்டம் மூலம் 2,797 விவசாயிகள் 785 மெ.டன் விளைபொருட்கள் ரூ.3.78 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. செயல்முறைகளான நுழைவு அனுமதி, தரம் பிரித்தல், மின்னணு வர்த்தகம் முதலிய செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளிக்கப்படுகிறது.
போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், e.NAM (மின்னனு தேசிய வேளாண் சந்தை) மூலம் பிரதி வாரம் திங்கட் கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலமும், புதன் கிழமைகளில் பருத்தி மற்றும் மணிலா ஏலமும், வியாழக் கிழமைகளில் நெல் ஏலமும் நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருத்தி, நெல், மணிலா, தேங்காய் மற்றும் கொப்பரை சாகுபடி செய்து விற்பனைக்கு தயார் நிலையிலுள்ள விவசாயிகள் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை விற்பனை செய்து பயனாடையலாம்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விற்பனை செய்வதால் சரியான எடை, மறைமுக ஏலம், நல்ல போட்டி விலை, உடனடி பணபட்டுவாடா, தரகு கமிஷன் போன்ற எவ்வித கட்டணமும் இல்லாத முற்றிலும் இலவச சேவை, கிடங்கில் இருப்பு வைக்கும்வசதி, பொருளீட்டு கடன் பெறும் வசதி போன்ற வசதிகள் இருப்பதால் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள உள்ளதால் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்த விவசாயிகளிடம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தென்னை சாகுபடி விவரம் மற்றும் தேங்காய் அறுவடை மற்றும் தற்போதைய மார்க்கெட் விலை நிலவரம் ஆகியவற்றை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மோகன், அலுவலர்கள் விற்பனைக்குழு செயலாளர் M. அருள்மணி, வேளாண்மை R. அருள்தாஸ், செல்வி கா. பவித்ரா, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ. அருள்வேந்தன், மேற்பார்வையாளர் ப. முருகேசன் மற்றும் வட்டாட்சியர் சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.