பூதப்பாண்டி, ஜுலை 16 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள ஈசாந்தி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அபிஷேக் (18). இவர் நாகர்கோவிலிலுள்ள ஒரு கல்லூரியில் ஐடிஐ படித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் துவரங்காடு பகுதியை சேர்ந்த ராஜன் மகன் ஆகாஷ் இவர்கள் இருவரும் நாவல்காட்டிலிருந்து துவரங்காடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயலும் போது எதிரே வந்த சொகுசு காரில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் அபிஷேக் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்கள் மீது மோதிய சொகுசு கார் மோதிய வேகத்தில் நிற்காமல் சென்றுள்ளது.
காயம்பட்ட இருவரையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அபிஷேக் இறந்துள்ளார். ஆகாஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதைபோலவே இன்று இதே பகுதியில் மூன்று பேர் ஒரே பைக்கில் சென்றன. அவர்கள் நிலை தடுமாறி அருகில் உள்ள வயலில் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே நாளில் இரண்டு பைக் விபத்துகள் நடந்ததால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.