நாகர்கோவில், அக். 25 –
நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி பேராசிரியர் சுப்பையாவின் பணியிடை நீக்கத்தைக் கண்டித்தும், மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட பல மடங்க அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தைத் திரும்ப வழங்கக் கோரியும் மூட்டா அமைப்பின் நான்காம் மண்டலம் சார்பில் இந்துக் கல்லூரி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முட்டா நான்காம் மண்டல தலைவர் பேரா. ஆர்தர் டேனியல் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மூட்டா இணைப் பொதுச் செயலாளர் பேரா.சிவஞானம் தொடக்க உரையாற்றினார். மூட்டா மேனாள் தலைவர் பேரா. அனந்த கிருஷ்ணன், ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பேரா.மனோகர ஜஸ்டஸ், மூட்டா நான்காம் மண்டல மேனாள் தலைவர் பேராசிரியர் ஹென்றி, கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பென்னட் ஜோஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் கிறிஸ்டோபர், தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோபிநாத், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் சுமஹாசன் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சந்துரு, மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவர் பேரா. ஐசக் ஷோபன ராஜ், மூட்டா மூன்றாம் மண்டலச் செயலாளர் பேரா.கோமதிநாயகம் ஆகியோர் போராட்ட வாழ்த்துரை வழங்கினர்.
மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நிறைவு உரையாற்றினார். மூட்டா அமைப்பின் நான்காம் மண்டல பொருளாளர் பேரா. கணேஷ் நன்றி கூறினார்.
இந்துக்கல்லூரி செயலாளர் நாகராஜன் செயல்பாட்டை கண்டித்தும், பணி இடை நீக்கம் செய்யப்பட்ட பொருளியல் துறை தலைவர் பேரா.சுப்பையாவை மீளப் பணி அமர்ந்திடக் கோரியும், மாணவர்களிடம் கூடுதல் கட்டணமாக வசூலித்த தொகையை நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மாணவர்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



