ஈரோடு, ஜூலை 4 –
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் கைத்தறி, துணி நூல் மற்றும் காதித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் தொழில்துறை வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், தண்ணீர் விநியோக அமைப்புகள், விரிவான சாலை வசதிகள், காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட தண்ணீர் விநியோக ஏற்பாடுகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவை குறித்து ஆய்வு நடந்தது.
மேலும் புதிய பொது சுத்திகரிப்பு நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் கூறினர். பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும், தொழில் துறை சூழலை புரிந்து கொள்ளவும், பிராந்தியத்தின் வளர்ச்சி சாத்தியக் கூறுகளை மதிப்பிடவும் சிப்காட் தொழில் பூங்காவில் நிலம் பெற்ற நிறுவன பிரதிநிதிகள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு தீர்வு காணுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார், சிப்காட் செயற்பொறியாளர் பசுபதி, சிப்காட் திட்ட அலுவலர் சுஜா பிரியதர்ஷினி மற்றும் சிப்காட் அலுவலர்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.



