ஈரோடு, ஜூலை 4 –
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 74) என்ற முதியவர் சிறுநீரகம் அறுவை சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இடது சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் ரத்த சோகை இருந்தது தெரியவந்தது. இதையொட்டி
அவருக்கு இரத்தம் செலுத்தி உடல்நிலை தேற்றப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கட்டியுடன் கூடிய இடது சிறுநீரகத்தை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கினர்.
மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு உடல்நிலை நன்கு தேறிய நிலையில் அந்த முதியவர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்த அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று டாக்டர்கள் கூறினர். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு
திட்டத்தின் கீழ் ரூ.44,200 ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவர் வினோத்பிரபு மற்றும் மருத்துவ குழுவினர் தலைமையில் முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஜெயபால் குணமடைந்துள்ளார்.
மேலும் குணமடைந்த அவர் ஏழை எளிய மக்களின் நலன் காத்திட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் சிறப்பான பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.