நாகர்கோவில், ஜூலை 23 –
தமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட அரசு முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாபெரும் தலைவர். ஒரு குழந்தை கூட வறுமையால் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக் கூடாது; பசியால் கல்வியை இழக்கக் கூடாது’ என்ற உயரிய நோக்கத்துடன், 1950-களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஏழை மாணவர்களுக்காக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்தினார். கல்வி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாகவே அந்தத் திட்டம் அமைந்தது.
அந்த மதிய உணவுத் திட்டம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கியது மட்டுமல்ல; கல்விக்கான பசியையும் தீர்த்தது. பள்ளி இடைநிற்றல் கணிசமாகக் குறைந்தது. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் பள்ளிச்சேர்க்கை அதிகரித்தது. கல்வி என்பது வசதியுள்ளவர்களின் உரிமை அல்ல, அனைவருக்கும் உரிய அடிப்படை உரிமை என்ற சமூகநீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்திய புரட்சிகரமான திட்டமாக அது விளங்கியது.
இன்று அதே மனிதநேயப் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயரைச் சூட்டியிருப்பது மிகவும் பொருத்தமான, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். மாணவர்களின் நலனுக்காக உணவையும் கல்வியையும் இணைத்த அவரது சிந்தனைக்கு இதைவிடச் சிறந்த அங்கீகாரம் இருக்க முடியாது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காமராஜர் விதைத்த கல்விப் புரட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். அந்தப் புரட்சியின் தொடர்ச்சியாகவே காலை உணவுத் திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருப்பது வரலாற்றுக்கும், கல்விக்கும், சமூகநீதிக்கும் வழங்கப்பட்ட மிகச் சிறந்த மரியாதையாகும் என கூறியுள்ளார்.


