செப். 20 –
பனை மரங்களை வெட்டுவதற்கு தடை ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவன தலைவர் எம்.ஏ. தாமோதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்: தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனைமரம் அதன் அடி முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படக்கூடியது. அதனால் அதனை கற்பகதரு, கற்பக விருட்சம் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
பனை மரத்தின் தாயகம் நமது தமிழ்நாடுதான். தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரத்தை உலகறிச்செய்த பெருமை பனையின் ஓலைக்கு உண்டு. ஓளவையின் ஆத்தி சூடி தொடங்கி திருக்குறள், தொல்காப்பியம் என அனைத்து இலக்கியங்களும் பனை ஓலையினால் எழுதப்பட்டது. பைந்தமிழ் இலக்கியத்தின் தாய்வீடு பனைமரமாகும்.
பழங்கால சோழ மன்னர்கள் தங்கள் பொற்காசுகளில் அடையாள சின்னமாய் பனைமரத்தை பதித்தனர். இதன் பெருமை கருதி பாரிமன்னன் தனது சின்னமாக பனைமரத்தை வைத்து இருந்தான்.
உலகின் மூத்தகுடியான தமிழ் குடிக்கும், பனைமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ள நிலையில் கடல் அரிப்பு, புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மனித குலத்தை காக்கும் மகத்தான பணிகளை பனைமரங்கள் செய்கிறது. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாத்து, மகரந்த சேர்க்கை நடைபேற பெரிதும் உதவுகிறது. இதனால் விவசாயத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும், கிராம பொருளாதாரத்திற்கும் பெரும்பங்காற்றி வந்த பனை மரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு மனிதகுலத்திற்கும், அனைத்து உயிரினங்களுக்கும் மிகுந்த நன்மை தரும் பனைமரங்களை பாதுகாக்கவும், பனைமரங்கள் அழிக்கப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு 2021 – 2022 நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி சில வழிகாட்டு நெறிமுறைகளோடு அரசானை வெளியிட்டுள்ளது. அதன்படி பனைமரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரகன்றுகள் நடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறோம்.
வட்டார அளவிலான குழு பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தோட்டக்கலை துறை உதவி அலுவலர், கூட்டாக கிராமம் வாரியாக இருப்பு பதிவேட்டை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெட்டப்படும் மரங்களின் பாகங்களை எடுத்து செல்லும் போது தோட்டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் மூலம் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை காண்பிக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. பனைமரத்தை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பெருகவும், அழிவில் உள்ள பனைமரங்களை காக்கவும் அரசின் இத்தகைய நடவடிக்கை நிச்சயமாய் உதவும் என நம்புகின்றோம். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதோடு அதனை பாதுகாப்பது நமது கடமை என்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திடவும் அரசு தீவிரமுனைப்பு காட்டிட வேண்டும் என கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ. தாமோதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



