கிருஷ்ணகிரி, ஜூலை 8 –
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குடுமேனஹள்ளி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சென்றாயப்பெருமாள் கோவில் இன்று திருவிழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராம மக்கள் ஊருக்கு சொந்தமான காளையை 40 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அழைத்து வந்தனர். கோவிலுக்கு வந்த காளைக்கு பூஜைகள் செய்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த பெண்கள் ஈரத்துணியுடன் சாலையில் படுத்துக்கொண்டனர். அவர்கள் மீது காளை நடந்து சென்றது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற காளை மூலவர் சென்றாயப்பெருமாள் முன்பாக காளை மண்டியிட்டு வணங்கி பின்னர் வெளியே வந்தது. இந்த திருவிழாவை ஒட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேலாக பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. அகரம்- குடுமேனஹள்ளி மற்றும் தேவீரஹள்ளி சாலைகளில் மக்கள் கூட்டம், டூவீலர்கள், ஆட்டோ, டூரிஸ்ட்பஸ், வேன்கள் என சாலை திக்கு முக்காடியது. இதனால் பல மணி நேரம் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.