ஈரோடு, ஜூலை 7 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய, மாவட்ட ஆட்சித்தலைவர் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மலைக் கிராமங்களுக்கு சாலைகள் அமைப்பது தொடர்பாகவும் சாலைப் பணிகள் குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாகவும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், ஊராட்சிகளில் மின் கட்டண நிலுவையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் பட்டா பெயர் மாற்றம் செய்ய கோருவது தொடர்பாகவும், சுகாதாரத்துறையின் சார்பில் பிறப்பு, இறப்பு பதிவில் பெற்றோரின் ஆதார் விபரங்களை மென்பொருளில் பதிவு செய்து இணைப்பது தொடர்பாகவும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், நடைபாதை அமைத்தும், வனவிலங்குகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு மதில் சுவரும் அமைத்து தருதல் தொடர்பாகவும். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கழிவுநீர் வடிகால் அமைத்துத் தரக் கோருதல் தொடர்பாகவும், பெண் தன்னார்வலர் பணியிடங்களை நிரப்புதல் தொடர்பாகவும், மின்சாரத் துறையின் சார்பில், புதிய மின் மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டுதல் தொடர்பாகவும், ஈரோடு விற்பனைக்குழு துறையின் சார்பில் நில உரிமை மாற்றம் செய்தல் தொடர்பாகவும், விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட வன அலுவலர் (ஈரோடு) குமிலி வெங்கட அப்பால நாயுடு திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



