மார்த்தாண்டம், அக். 7 –
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். பின்னர் 27 ஆம் தேதி மாணவியை கடத்தி சென்ற வாலிபரிடமிருந்து போலீசார் மீட்டனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பின் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் மாணவியின் தாயார் சிகிட்சையில் இருந்த போது பணகுடி, முத்து விநாயகர் தெருவை சேர்ந்த ஆஷிப் முகம்மது (22) என்பவர் தனது தங்கையை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து கவனித்து வந்தார். அதில் மாணவிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி ஆஷிப் முகமது மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் ஆஷிப் முகமது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதனிடையே சிறுமியின் வீட்டில் புகுந்து மிரட்டியது தொடர்பாக ஆஷிப் முகமது மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த வழக்கில் இன்று மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரையா, ஆஷிப் முகமதுவிற்கு 20 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
ஆஷிப் முகம்மதுக்கு தற்போது 30 வயது ஆகிறது. இவர் மீது தென்காசி பகுதியில் ஜாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


