நித்திரவிளை , அக். 21 –
நித்திரவிளை அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). இவர் அருமனை அருகே தங்கியிருந்து ஹிட்டாச்சி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி உறவினர் ஒருவர் மரண நிகழ்ச்சிக்காக சூரியகோடு வந்திருந்தார். பின்னர் 18ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நடைக்காவு பகுதிக்கு சென்று உறவினர் அடக்கத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு பின்னால் பைக்கில் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
நடைக்காவு டாஸ்மாக் கடை அருகே வைத்து சூரிய கோடு பகுதியை சேர்ந்த ஞானசீலன் மகன் சதீஷ் என்ற சாச்சன், அரிச்சந்திரன் மகன் சுனில், செல்லப்பன் மகன் கோபகுமார், நேசமணி மகன் பிஜு, தனிஸ்லாஸ் என்பவர் மகன் அனில் குமார் என 5 பேர் பைக்குகளில் வந்தனர். பின்னர் அந்த கும்பல் சதீஷ்குமாரை தடுத்து நிறுத்தி பைக்கில் இருந்து கீழே தள்ளி உள்ளனர். தொடர்ந்து சிமெண்ட் கல்லை எடுத்து அவரது முகத்தில் இடித்தும் தலையில் அடித்தும் முகத்தை சிதைத்து விட்டு பைக்குகளில் தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சதீஷ்குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சதீஷ்குமாரின் தாயார் ஓமனா (65) என்பவர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சதீஷ் என்ற சாச்சன், சுனில், பிஜு, கோபகுமார், அனில்குமார் ஆகிய ஐந்து பேர் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து, தலை மறைவானவர்களை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கு இடையே கொல்லங்கோடு காவல் நிலத்தில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு கொலை வழக்காக போலீசார் இன்று மாற்றி அமைத்தனர். மேலும் தலைமறைவான சதீஷ் என்ற சாச்சன் மீது கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 4 அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் ரவுடி பட்டியலில் அவரது பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



