நாகர்கோவில், நவ. 7 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது மாநகராட்சி சுகாதார அலுவலர் நடவடிக்கை.
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை போன்ற பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், தலைமையில் சுகாதார ஆய்வாளர் கண்ணன், ஆஷிகா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் ஆகியோர் செட்டிகுளத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி தெரிவிக்கும் போது: மெல்லும் புகையிலை என்பது மெதுவாக மெல்லப்படும் ஒரு வகை புகையிலை தயாரிப்பு ஆகும். இது நிகோடினை வெளிப்படுத்தி, அடிமையாக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். புகை பிடிப்பதை விட இது பாதுகாப்பானது அல்ல, மேலும் பல கடுமையான உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் பெரிய அளவுகளில் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது.
எங்களுடைய இந்த முயற்சிகள் இந்த தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் நுகர்வைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சட்டவிரோத புகையிலை பொருட்களை சோதனை செய்து பறிமுதல் செய்து புகையிலை பொருட்களின் விற்பனைக்கு முழுமையான தடையை அமல்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்தனர்.



