நாகர்கோவில், செப். 22 –
குமரி மாவட்ட மருந்து தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆய்வாளராக இருந்தவர் திருப்பூர் பகுதி கதிரவன் (43). இவரிடம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த ஹரிசுதன் (35) என்பவர் மெடிக்கல் ஸ்டோர் தொடங்க விண்ணப்பித்தார். அப்போது அவரிடம் கதிரவன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதா கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கதிரவன் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய போது அவரை கடந்த 12ம் தேதி கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசினைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்ற போது அங்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். கைதிகளுக்கான வார்டில் கூட கதிரவன் மாற்றப்படாமல் இருந்தார். இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்த நிலையில் கதிரவன் மீது ஏற்கனவே மோசடி வழக்கு இருப்பது தெரிய வந்தது. கடந்த 2021 இல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த பகுதியில் ஆன்லைன் நிறுவனம் மூலம் கதிரவன் ரூ. 7 லட்சம் வரை மோசடி செய்ததாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கதிரவன் ஜாமீனில் வந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் எப்படி இவர் அரசு பணியில் சேர்ந்தார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஒரு வாரம் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த கதிரவன் நேற்று மருத்துவ பரிசோதனை முடிந்து டாக்டர்கள் டிஸ்சார்ஜ் அறிக்கை கொடுத்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரன்படி கதிரவன் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.


