நாகர்கோவில், ஆகஸ்ட் 5 –
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, இலக்கியவாதியாக தலைசிறந்து விளங்கிய தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகவும் இருந்த கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி எனது தலைமையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
நாகர்கோவில் வடசேரி அறிஞர் அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி தொடங்கி, அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை சந்திப்பு, எஸ்பி அலுவலகம், கட்டபொம்மன் சந்திப்பு, ஔவை சண்முகம் சாலை வழியாக சென்று ஒழுகினசேரியில் உள்ள தலைமை கழக அலுவலகம் வந்தடைந்து பின்னர் கலைஞர் முழு திரு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
எனவே இந்த அமைதிப் பேரணியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட, மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள், உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.