நாகர்கோவில், பிப். 19 –
குமரி மாவட்டத்தில் கேரள ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை பரவலாக நடந்து வருவதாக குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு தொடர் புகார்கள் சென்றன.
இந்நிலையில் கோட்டாறு இருளப்பபுரம் பகுதியில் வாடகை வீட்டில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்து வருவது குறித்து கோட்டார் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம், ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 13 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனர். 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை கல்லுக்குடியை சேர்ந்த தினேஷ் பாபு (39), நாங்குநேரியை சேர்ந்த வீரமணிகண்டன் (27), திருநெல்வேலியை சேர்ந்த துரை (18), இசக்கிதவசி (18), தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி (30), நாங்குனேரியை சேர்ந்த அரவிந்த் (29) என தெரியவந்தது.
நாகர்கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்றது போலீசார் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோல் குமரியில் வேறு இடங்களில் விற்பனை நடைபெற்று வருகிறதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


