நாகர்கோவில், பிப். 23 –
கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்தின் பூதப்பாண்டி வனச்சரகம், ஆரல்வாய்மொழி பிரிவு அருகே நேற்று (22.02.2026) காலை சுமார் 10.30 மணியளவில் சாலை விபத்தில் ஆண் சாம்பார் மான் ஒன்று உயிரிழந்தது.
தோவாளை – காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தோவாளை அருகிலுள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சாலையில் நேற்று காலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோர புதரில் இருந்து திடீரென ஒரு சாம்பார் மான் (மிளா ) காரின் மீது பாய்ந்தது. எதிர்பாராத இந்த மோதலில் காரின் முன் பகுதி மற்றும் கண்ணாடி பலத்தை சேதம் அடைந்தது. இருப்பினும் காரில் பயணம் செய்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு முதலுதவி அளித்தனர்.
இந்த விபத்தில் சாம்பார் மான் உயிரிழந்தது. தகவல் கிடைத்தவுடன் வனத்துறை அதிகாரி அன்பழகன் தலைமையில் பூதப்பாண்டி அலுவலர் பாலசந்திரிகா, ஆரல்வாய்மொழி பிரிவு அலுவலர் முத்துராமலிங்கம், வனக்காப்பாளர் பிரபின், வன காவலர்கள் புஷ்பராஜ், சிவதணிகை வேலன், தடுப்பு வேட்டை காவலர் தனிஷ் மற்றும் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து சாம்பார் மாமனின் உடலை மீட்டு, தோவாளை கால்நடை மருத்துவ அதிகாரி மூலம் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்த விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் கூறுகையில்: சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வனப்பகுதி அருகே மிதமான வேகத்தில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.



