சூலூர், செப். 10 –
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரச்சல் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் இவர் நூற்பாலை மற்றும் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் உள்ளே யாரும் வராதவாறும், உள்ளே இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாத வகையில் வீட்டை பூட்டினர். தொடர்ந்து
வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் தன் வசம் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து வீடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் வந்திருந்தனர்.
வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சோதனையை முன்னிட்டு தொழில் அதிபர் ராமச்சந்திரனின் வீட்டை சுற்றி 30-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் போலீசார் இருந்தனர். ராமச்சந்திரன் தனியார் வங்கி ஒன்றில் தனது தொழிலுக்காக கோடி கணக்கில் கடன் வாங்கியதாகவும் அந்த கடனை ஒரே நேரத்தில் மொத்தமாக அடைத்து விட்டதாகவும் தெரிகிறது.
இவ்வளவு பெரிய தொகையை எப்படி ஒரே நேரத்தில் கட்ட முடிந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறையினர் தொழில் அதிபரின் வீட்டில் வங்கி அதிகாரிகள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.


