போகலூர், அக். 25 –
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சாதிக் பாட்சா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டியில் தேர்வு செய்யப்பட்டு சாதித்து வருகின்றனர். குறிப்பாக கைபந்தாட்ட போட்டி வீரர்கள் சாதனை மிகவும் போற்றுதலுக்குரியது.
ராமநாதபுரம் மாவட்டம் அமிர்சுல்த்தான் அகாடமி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள். இவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தொண்டி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரிய மைதானம் வைத்திருக்கும் பள்ளி நிர்வாகம் சரியான கைபந்து மைதானம் உறுவாக்கினால் நிச்சயம் தொண்டி மாணவர்கள் சாதிப்பார்கள். தொண்டி ஜமாத் நிர்வாகம் எதிர்கால சந்ததிகள் கல்வியிலும் விளையாட்டிலும் சாதிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழக அரசு தொண்டியில் மைதானம் கொடுத்தும் மினி ஸ்டேடியம் சகல வசதியுடன் வருவதற்கு சரியான காரணம் சொல்லாமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று தெரியவில்லை. தொண்டி சுற்றுவட்டார மாணவர்கள் நலன் கருதி மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் இவ்வாறு அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



