பூதப்பாண்டி, ஜுன் 18 –
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாகக் கீரிப்பாறை அருகேயுள்ள மீன்முட்டிப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தினால் திடீர் காட்டருவி ஏற்பட்டது. மேலும் அருவியானது சீறிப் பாய்ந்து செல்கிறது. ஏற்கனவே காளிகேசம், கீரிப்பாறை வனப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள காளிகேசம், கீரிப்பாறை, கரும்பாறை, வாழையத்து வயல், தடிக்காரன்கோணம், சீதப்பால் போன்ற இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளமானது இரு கரைகளையும் தொட்டவாறு கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கீரிப்பாறை அருகேயுள்ள மீன்முட்டி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தினால் திடீர் காட்டருவி ஏற்பட்டது. மேலும் அருவியானது மிக வேகமாக மேல் இருந்து கீழே வெண்மை நிறத்தில் சீறிப் பாய்ந்து செல்கிறது. ஏற்கனவே காளிகேசம், கீரிப்பாறை வன சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.



