தேனி, ஆகஸ்ட் 8 –
அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 100 % மாணவர்கள் சேர்க்கையை பூர்த்தி செய்யும் பொருட்டும் மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதியும் நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் 40 வயதிற்குட்ட ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
பயிற்சியில் சேருபவர்களுக்கு தமிழக அரசு மூலம் மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், வரைபடக்கருவிகள், சீருடை(2செட்), இலவச மூடுகாலணி, வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100% வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர்(இருப்பு தப்புக்குண்டு சாலை, உப்பார்பட்டி) ஆகிய இடங்களில் நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து சேர்க்கை மேற்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50/- மற்றும் சேர்க்கைக்கான கட்டணமாக ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/- , ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195/- நேரில் செலுத்த வேண்டும்.
மேலும் 2021-ஆம் ஆண்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தேனி ஐ.டி.ஐ – 04546-291240 மற்றும் 9499055765, ஆண்டிபட்டி ஐ.டி.ஐ- 9499055770, போடிநாயக்கனூர் ஐ.டி.ஐ – 9499055768 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தொழிற்பயிற்சி சேர்க்கை தொடர்பாக தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.