கன்னியாகுமரி, ஆக. 1 –
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலை ஓரங்களில் எந்தவித ஆக்கிரமிப்பும் அனுமதிக்கப்படக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் கட்டிடங்கள் அமைத்திருந்தவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி அருகே முருகன்குன்றம் பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டது. சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.
கன்னியாகுமரியில் இருந்து காணிமடம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தங்களுக்குச் சொந்தமான இடங்களை சர்வே செய்து எல்கைக் கற்கள் மற்றும் அடையாளக் கம்பங்களை நட்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன் அறிவிப்பு வழங்கியிருந்தனர்.
இந்த நடவடிக்கையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் திட்ட இயக்குநர் சச்சின் குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். மேலும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அகஸ்தீஸ்வரம் வருவாய் ஆய்வாளர் சுஜி முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலைகளை பாதுகாப்பாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையிலும் பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



