தென்தாமரைகுளம், மே 19 –
தென் தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலை பள்ளியில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சந்தித்த முன்னாள் மாணவர்கள் – சுமார் அரை நூற்றாண்டுக்கு பிறகு நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.
பொதுவாக நாம் படித்த பள்ளி மற்றும் முன்னாள் நண்பர்களை நினைவு கூறும் நிகழ்வாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு அரங்கேறும். இதில் பெரும்பாலும் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெறுவதை நாம் பார்ப்பது உண்டு. ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் 1978-79ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த நண்பர்கள் அனைவரும் 47 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வந்து ஒன்று சேர்ந்து பழைய நினைவுகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் கால்வின் தலைமை தாங்கி தலைமையுரை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியை அனு ஜெ பிரீத்தா மற்றும் முன்னாள் தாளாளர் சாலமன் நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரையாற்றினர். முன்னாள் ஆசிரியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சந்திரசேகர், செல்லதுரை, ஸ்டெர்லிங் டேனியல் ஆகியோர் செய்தனர். மேலும் அப்போதைய மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை விழாவிற்கு வரவழைத்து மாலை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பிற்காக 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்து ஒரே இடத்தில் சங்கமித்து தங்கள் மகிழ்ச்சியே பரிமாறிக் கொண்டனர். 47 வருடங்களுக்குப் பிறகு அதாவது சுமார் அரை நூற்றாண்டுக்கு பிறகு நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



