நாகர்கோவில், ஜன. 12 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் கரையில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. சபரிமலைக்கு செல்வது போலவே, பெண்கள் இருமுடி கட்டி இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் கொடை விழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. அதேபோல் ஆவணி அஸ்வதி, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், இலையப்பம், திரளி, மண்டையப்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல்களை வைத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இதுபோலவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மானில் மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா சமாஜ் இன்டர்நேஷனல் (MASSI UAE) அமைப்பின் சார்பில், வெளிநாடு வாழ் தமிழர்கள் மண்டைக்காடு பகவதி அம்மனின் திருவுருவச் சிலையை நிறுவி, விழாவானது நடைபெறுகிறது. நான்கு கால பூஜை, ஒடுக்கு பூஜை உள்ளிட்ட அனைத்து பாரம்பரிய பூஜைகளையும் முறையாக செய்து வருகின்றனர். இதில் பெண்கள் பொங்கலிட்டு பக்தியுடன் வழிபாடு நடத்துகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் வழிபாட்டில் மொத்தம் 1000 த்திற்கும் மேற்பட்ட மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ ஜெ. பகவதி குருக்கள் நேரில் கலந்து கொண்டு இந்த பூஜைகளை சிறப்பாக நடத்தினார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து பல வருடங்களாக இந்த பொங்கல் வழிபாடு நடைபெற்று வருவதாகவும், இதுபோன்று உலகின் 13 நாடுகளில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களால் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளை மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா சமாஜ் இன்டர்நேஷனல் செய்து வருகிறது.



