திருவெண்ணெய்நல்லூர், செப். 01 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் மீட் பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் ஏரியில் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஒத்திகை பயிற்சி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு, லைப்பாய், லைப் ஜாக்கெட் மற்றும் மீட்புப்பணிகளுக்கு உதவும் பவர்ஷா, கான்கிரீட் கட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மூலம் வெள்ளநீரில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் திருவெண்ணெய்நல்லூர் துணை வட்டாட்சியர் வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல், ஒன்றிய கவுன்சிலர் விசுவநாதன், ஏரி பாசன தலைவர் ஜெயச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



