குளச்சல், ஜூலை 11 –
ரூபாய் 1 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத குளச்சல் கே.எஸ்.எஸ்.எஸ் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
பாழடைந்து புதர் மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருவதால் உடனடியாக மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை. குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள கே.எஸ்.எஸ்.எஸ் குடியிருப்பில் தமிழ்நாடு அரசால் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா கண்டு ஆறு மாதங்கள் ஆகியும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் பூட்டப்பட்டு இருப்பதை குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது:
குளச்சல் நகராட்சியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அங்கு போதிய இட வசதி இன்றி காணப்பட்டது. எனவே கே.எஸ்.எஸ்.எஸ் குடியிருப்பு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க போதிய இடவசதியுடன் காணப்பட்டதால் இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர் அறை, நோயாளிகள் அறை, மருந்து வைக்கும் இடம், கழிவறைகள் போன்றவைகள் அமைய வேண்டிய இடங்கள் போன்றவற்றிற்கான வரைபடங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
2024-ம் ஆண்டு இறுதியில் இப்பணி முடிவு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம் பிப்ரவரி 15-ம் தேதி இக்கட்டிடம் அமைச்சரால் திறப்பு விழா கண்டது. இதனால் இப்பகுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்களோ செவிலியர்களோ பணி அமர்த்தப்படாமல் பூட்டிய நிலையிலேயே உள்ளது.
தமிழக முதல்வர் மருத்துவ உதவி சரிவர கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்படக் கூடாது என்ற சிறந்த நோக்கத்தில் போதிய மருத்துவ வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றை ஏற்படுத்தி பொதுமக்களை நோய்களிலிருந்தும் விபத்து அவசர தேவைகளிலிருந்தும் பாதுகாத்து வருகிறார்.
முதல்வரின் திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் செயல்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒருமுறை கூட பார்வையிட்டு ஆய்வு செய்யாததின் விளைவு ஆரம்ப சுகாதார நிலையம் ஆறு மாதங்கள் ஆகியும் பூட்டிய நிலையில் உள்ளது.
எனவே, முதல்வர் குளச்சல் பகுதி மக்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி உடனடியாக புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.