சிவகங்கை, அக். 24 –
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 224-வது நினைவு தின விழா அரசு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருது பாண்டியர்களின் நினைவுத்தூணிற்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. ராஜசெல்வன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .



