போகலூர், ஆக. 14 –
ராமநாதபுரம் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையம் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் செல்போன்கள் தொலைந்து போனதாக கொடுக்கப்படும் புகார்கள் முறையாக காவல் நிலையங்கள் மனுக்களாக பதிவு செய்யப்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலைய உதவி உடன் இணைய வழி செயலி மூலம் தேடப்படுகிறது.
மேலும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் அனைத்து உட்கோட்டங்களிலும் தொலைந்து போன செல்போன்கள் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 2024-ம் ஆண்டு மொத்தம் 582 செல்போன்கள் சைபர் க்ரைம் காவல் நிலையம் மூலம் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் கொடுக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடம் ஏற்கனவே 300 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தற்சமயம் 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 25 லட்சம் ஆகும். மேலும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பேசுகையில்:
பொதுமக்கள் வங்கி ஊழியர்கள் என அறிமுகம் செய்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்கள் கேட்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொலைபேசி வாயிலான வங்கி தொடர்பான புகார்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் கஸ்டமர் கேர் எண் அல்லது வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டில் உள்ள கஸ்டமர் கேர் எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் குறைந்த முதலீட்டில் அதிக பணம் வழங்கும் செயலிகளை அல்லது நபர்களை நம்பி பணம் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு இலவச பரிசு பொருட்கள் லாட்டரி அல்லது சுற்றுலா செல்வதற்கான இலவச கூப்பன் கிடைத்துள்ளது எனக் கூறி முன்பணம் கேட்பவர்களை நம்பி பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் வேலை வாய்ப்பு என்று கூறி பணத்தைப் பெற்றுக் கொள்ளும் மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இது போன்ற விளம்பரங்களை தவிர்க்கவும்.
சிட் பண்ட் போன்ற போலியாக நிறுவனம் நடத்தி சிறிய சிறிய பணத்தை பெற்றுக்கொண்டு பின்னர் நிறுவனத்தை காலி செய்து செல்கின்றனர். சிட் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும். முகநூலில் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் போல் முகநூல் கணக்கு உருவாக்கி அவர்கள் போட்டோ மற்றும் அவரின் பெயரை பயன்படுத்தி பணத்தை ஏமாற்றும் வேலையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை செலுத்தும் முன்னர் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி பணத்தை செலுத்த வேண்டும்.
பணப்பரிவர்த்தனையில் ஏமாற்றங்கள் நடந்து விட்டதாக கருதினால் 1930 என்ற கட்டணமில்லா என்னை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



