மதுரை, ஜூன் 30 –
மதுரை மருத்துவரணி சார்பில் மதுரை சரவணா மருத்துவமனையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவரணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பா. சரவணன் தலைமையில் இரத்ததான முகாமை மகளிரணி துணைச் செயலாளரும், நடிகையுமான காயத்திரி ரகுராம் துவக்கி வைத்தார்.
இதில் 72 நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் சரவணன் கூறுகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 72-வது பிறந்த நாளையொட்டி மருத்துவரணி சார்பில் வருடந்தோறும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆறுபடை முருகன் கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. தற்போது ரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஒன்றும் ஊதி அணைக்க கூடிய தீக்குச்சி இல்லை என்று கூறியுள்ளார். இன்றைக்கு தமிழக மக்கள் எரிமலையாக உள்ளனர் என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா? இன்றைக்கு மளிகை பொருள் விலை உயர்வு, பால் விலை உயர்வு என அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் உயர்ந்துள்ளது. எனவே இதன் மூலம் பெண்கள் வயிறு எரிந்து உள்ளனர்.
அதே சமயம் விவசாயிகளுக்கு இடு பொருட்களுக்கான கடன்கள் வழங்கவில்லை. கடந்த வாரத்தில் உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் பகுதியில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய இந்த அரசு முன் வரவில்லை. இதனால் அந்த பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட செய்திகள் நாளேடுகளில் வந்துள்ளது. இதெல்லாம் பார்க்கும் பொழுது ஆளுமை திறனற்ற ஆட்சியாகவே திமுக இருக்கிறது.
மேலும் மாணவர்களுக்கு மடிக்கணி திட்டம் வழங்கவில்லை. தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கவில்லை. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று சொன்னார்கள். இதுவரை 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அதே போல தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்கின்றன. இதனால் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் வயிறு பற்றி எரிகிறது.
இதையெல்லாம் பார்க்கும் பொழுது ரோம் நகர் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல இன்றைக்கு முதலமைச்சர் உள்ளார். ஆனால் தமிழக மக்கள் எரிமலையாய் இந்த ஆட்சி மீது உள்ளார்கள். திமுக ஆட்சியை அப்புறப்படுத்த 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரின் தலைமையில் கூட்டணி அமையும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலரும் என்று கூறினார்.