கிருஷ்ணகிரி, ஏப். 11 –
பர்கூர் அருகே திமுகவிற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட நிர்வாகியின் வீட்டிற்கு கத்தியோடு சென்று கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தை சேர்ந்தவர் ராமன், திமுக ஒன்றிய வர்த்தகரணி அமைப்பாளர். இவரது மனைவி எல்லம்மாள் (41). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் 2:30 மணி அளவில் சாலிநாயனப்பள்ளியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுரேஷ் (41) சுருளி கத்தியுடன் வந்து ராமனின் வீட்டின் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பர்கூர் அதிமுக வேட்பாளர் கோவிந்தராசனுக்கு எதிராக பிரசாரம் செய்வீர்களா. உங்களை கொன்று விடுகிறன்’ என மிரட்டியுள்ளார். எல்லம்மாள் வீட்டின் கேட்டை மூடி வீட்டிற்குள் சென்றதால் கேட்டை உடைக்க முற்பட்டுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் சுரேசை தட்டி கேட்டுள்ளனர். அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய சுரேஷ் அப்பகுதியை சேர்ந்த சுசீலா என்ற பெண்ணை தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
இந்நிலையில் இன்று பர்கூர், தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பர்கூர், அ.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தராசன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்பட வழக்குகளில் சிக்கியவர், அதை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஓட்டு கேட்ட அக்கட்சி நிர்வாகியை, கோவிந்தராசன் தூண்டுதல் பேரில் அவரது உறவினர் கத்தியை காட்டி மிரட்டி, பெண்களை தாக்கி சென்றுள்ளனர். இது அராஜகத்தின் உச்சம். இது குறித்து போலீசாரிடம் கேட்டால் உரிய பதில் அளிக்க மறுக்கின்றனர். முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பர்கூர் போலீசார் கூறுகையில், ‘சுரேஷ் மீது வழக்கு பதிந்து, அவர் வீசி சென்ற கத்தி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள சுரேசை தேடி வருகிறோம்’ என கூறினர்.


