தருமபுரி, ஜூலை 9 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம் ரூ.36.67 கோடி மதிப்பீட்டில் 4.25 ஏக்கர் பரப்பளவில் தரை தளம் மற்றும் ஐந்து மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து புதிய ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் சதீஷ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 1,029 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை அமைச்சர் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உதவி ஆசிரியர் காயத்ரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.