தருமபுரி, ஜூலை 13 –
தருமபுரி அடுத்த சோகத்தூரில் உள்ள டான் போஸ்கோ கல்லூரியும், ஈரணிலம் அமைப்பும் இணைந்து “ஜனனம் – போதைப்பொருள் அடிமைத்தனமும் சமூகத்தில் அதன் தீமைகளும்” என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளரும் இல்லத்தந்தையுமான இராபர்ட் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். நிகழ்வை அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார். கல்லூரித் துணை செயலாளர் சிபி மேத்யூ, கல்லூரி முதல்வர் ஆனந்த், துணை முதல்வர் அருட்தந்தை தாமஸ், பொருளாளர் அமலவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட காவல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது: இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். போதைப்பொருள் ஒரு மனிதனின் கல்வியையும், குடும்பத்தையும், எதிர்காலத்தையும் சீரழித்துவிடும் என பல்வேறு விழிப்புணர்வை எடுத்துரைத்தார். “போதைக்கு இல்லை என்று சொல்லுங்கள், வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தருமபுரி தாசில்தார் சுகுமார் மற்றும் ஈரணிலம் நிறுவனர் தமிழரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு வண்ண ஓவிய கண்காட்சியை பார்வையிட்டனர்.



