தருமபுரி, ஜூலை 3 –
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் துர்க்கையம்மன் கோவில் லட்சார்ச்சனை விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் லட்சார்ச்சனை தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு துர்க்கையம்மன் கோவில் 35-வது ஆண்டு லட்சார்ச்சனை தேர்த்திருவிழா கடந்த 25ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மாரியம்மன் கோவில் அருகில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்த உடன் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி தொடர்ந்து 7 நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு 3 காலங்களிலும் துர்க்கையம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து துர்க்கையம்மனுக்கு பூர்த்தி ஹோமம், 108 சங்காபிஷேகம் மற்றும் காசி கங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக துர்க்கையம்மன் தேரோட்டம் நடைபெற்றது. காலையில் பெண்கள் மட்டும் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் மின்விளக்கு அலங்காரத்தில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இறுதி நிகழ்வாக அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை துர்க்கை அம்மன் விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.



