தருமபுரி, ஜூன் 28 –
தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கூலிப்படைகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து இருப்பதே பல்வேறு குற்ற செயல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. போதை பொருட்களின் வியாபார சந்தையாக தமிழகம் மாறிவிட்டது. ஆனால் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்காமல் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன், நகரச் செயலாளர் பார்த்திபன், மாநிலச் செயலாளர் பாலு மற்றும் மாநில, மாவட்ட, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.