தருமபுரி, ஆகஸ்ட் 14 –
தருமபுரியில் இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத், தருமபுரி மற்றும் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தருமபுரி இணைந்து Workshop on Flagship Schemes நிகழ்ச்சி பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் செல்வ பாண்டியன் தலைமை வகித்தார். முன்னதாக காமராஜர் பகத்சிங் இளைஞர் நற்பணி சங்கத்தின் செயலாளர் கபில்தேவ் வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, திறன் மேம்பாட்டு அலுவலர் சந்திரா, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கௌரி, இந்திய அஞ்சல் துறை தருமபுரி தலைமை அஞ்சலகத்தின் மேற்பார்வையாளர் கீதா, இந்திய அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் குமரன், தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் கடன் வழிகாட்டி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அவரவர் துறை சார்ந்த திட்டங்கள், வழங்கப்படும் உதவி தொகைகள் மற்றும் மானியங்கள் குறித்து விரிவான கருத்துக்களை வழங்கினார்கள்.
முன்னதாக இந்நிகழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஓவியம், பேச்சு மற்றும் வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கில துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் ஒருங்கிணைத்தார். மை பாரத் தருமபுரியின் தேசிய இளைஞர் தொண்டர்கள் மஞ்சுளா மற்றும் சுகன்யா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை நடத்த உதவி புரிந்தனர். இறுதியாக மை பாரத் தருமபுரியின் பல்நோக்கு பணியாளர் ரா. முனியப்பன் நன்றி கூறினார்.



