மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே!
கடந்த மே 25 அன்று விழிஞ்ஞம் அதானி சரக்குப்பெட்டக மாற்றுமுனைய துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச்சென்ற எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பல் கொல்லம், ஆலப்புழா கடலில் 38 கடல்மைலில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் தாங்கள் அறிந்ததே!
அந்த விபத்தில் கப்பலில் இருந்த 640 சரக்குப்பெட்டகமும் கடலில் மூழ்கிப்போனது. அதில் 25 சரக்குப்பெட்டகங்களில் மிகவும் ஆபத்தான ரசாயங்கள் இருந்ததாகவும் 88 மெட்ரிக் டன் எண்ணெய் இருந்ததாகவும் கப்பல் கம்பெனி கூறியது. இதனால் கடலில் மிகப்பெரும் பேரழிவு நடந்துவிட்டதாக கேரள அரசு அறிவித்து மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்காமலும் கரையில் குடியிருக்கும் மக்கள் கடலிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விபத்து கேரளாவில் நடந்ததாலும் இதன் பாதிப்பு கேரளாவோடு நின்றுவிடுமென்று மாநிலப் பேரிடராக கேரள அரசு அறிவித்தது. ஆனால் அதன் பாதிப்பு அடுத்த நாளே தமிழ்நாட்டில் குறிப்பாக குமரிமாவட்டத்தில் உணரப்பட்டது. கன்டெயினர்கள் இனையம் சின்னத்துறை, மிடாலம், வாணியக்குடி, கோடிமுனை, கடியப்பட்டணம், முட்டம் கன்னியாகுமரி என்று பலபகுதிகளில் கரையேறி மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முடப்பட்ட பைகளும் சிதைந்த நிலையில் பிளாஸ்டிக் வெள்ளை கூழாங்கற்கள் போன்ற பொருட்களும் குமரிமாவட்டத்தின் அத்தனை கடற்கரை கிராமங்களிலும் குப்பைபோன்று குவிந்துள்ளது. அது என்ன பொருள் அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமலும் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்த முடியாமலும் அதிகாரிகள் திணறுகிறார்கள். கடலோர மக்கள் அதன் ஆபத்துகளை உணராமல் காட்சிப்பொருளாகப் பார்க்கின்ற நிலையும் அதை கைகளில் எடுக்கும் பரிதாபமான நிலையும் உள்ளது. கன்டெயினர்களை கடலிலிருந்து வெளியேற்றவும் குவிந்துகிடக்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் பேரிடர் மீட்புக்குழுவினர் குஜராத்திலிருந்து வரவேண்டும் என்கிறார்கள்.
இந்த பாதிப்பு கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கீழா சேலுக்கும் கர்நாடகா,மகாராஷ்டிரா,கோவா போன்ற மாநிலங்களில் மேலா சேலுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். நமது குமரிமாவட்டத்தில் இது ஒரு தலைமுறை காலத்திற்கு கடலுக்கும் கடற்கரைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடலுக்குச் செல்லவிடாமல் கரையில் இருக்கவிடாமல் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிவுக்கு உள்ளாக்கிய இந்தப் பேரழிவிலிருந்து மக்களை மீட்க மீனவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கப்பல் கம்பெனி, அதானி சரக்குப்பெட்டக துறைமுக குழுமம், கேரள அரசு மற்றும் ஒன்றிய அரசுகள் இந்த இழப்பீடுகளை விரைந்து வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு மாநில பேரிடராக அறிவித்து தங்கள் மாநில மக்களுக்கு முன்னெச்சரிக்கை, மீட்பு, மறுகட்டமைப்பு என்று செய்துவருகிறது. ஆனால் இது கேரளாவோடு நின்றுவிடும் பிரச்சனையல்ல; நாளையோ நாளை மறுநாளோ நாலு மாதத்திலோ முடியும் பிரச்சனையுமல்ல. எனவே, இந்த கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து ஏற்படும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மீனவர்களுக்கும் தலா ஒரு கோடி இழப்பீடு பெற்றுக்கொடுக்கவும் ஆபத்தான ரசாயன கழிவுகளால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அது விவசாய நிலங்களிலும் பாதிப்பை உருவாக்குவதால் அவைகளை ஆய்வுசெய்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வாங்கிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமாறுமிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தேசிய பேரிடர் மீட்புக்குழுவை குமரிமாவட்டத்தில் முகாமிடச் செய்து கப்பலிலிருந்து வெளியாகும் கழிவுகளும் ரசாயனங்களும் உடனுக்குடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, கடலில் பரந்து விரிந்து கிடக்கும் எண்ணெய் கழிவுகளை முற்றிலுமாக வெளியேற்றி கடலின் சூழலியலையும் கடல்வாழ் உயிர்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாக்கவும் வேண்டுகிறோம்.


