தருமபுரி, செப்டம்பர் 27 –
தருமபுரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடுர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் ஏழாவது புத்தகத் திருவிழா தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் 60 அரங்குகளுடன் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஐந்தாம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சி விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். தகடுர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன் வரவேற்று பேசினார்.
விழாவில் ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது. கடை யேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் பிறந்த தருமபுரி மண் வரலாற்று சிறப்புமிக்க வாய்ந்தது. 2000 ஆண்டு வரலாற்றுக்கு சொந்தமானது தருமபுரி என்றார். இந்த புத்தக கண்காட்சியில் ஆயிரம் கணக்கான தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் தினமும் சிறப்பு சொற்பொழிவுகள், நூல் வெளியீட்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்விழாவில் நகராட்சி தலைவர் லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூத்தப்பாடி பழனி நன்றி கூறினார்.



