தருமபுரி, ஜூலை 15 –
தருமபுரி பகுதியில் ஓடும் சனத்குமார் நதியை சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி அன்னசாகரம், பாரதிபுரம், ஏமக் குட்டியூர் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்வளத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் மாலதி, நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ ரத்தினம், நகர அமைப்பு ஆய்வாளர் ஜெயவர்மன் உள்ளிட்ட அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வத்தல் மலையில் இருந்து மழைக்காலங்களில் வரும் தண்ணீர் 46 கிலோ மீட்டர் தூரம் ஓடி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. தற்போது சனத்குமார் நதி குட்டை போல காட்சியளிக்கிறது. இந்த நதியில் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை கழிவுகள் அதிகம் காணப்படுகிறது. இந்த நதியில் உள்ள குப்பைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
இந்த நதி ஓடும் பகுதியில் 8 தடுப்பு அணைகள் உள்ளது. இதனை சீரமைப்பதுடன், கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும். தமிழக அரசு சனத்குமார் நதியை சுத்தம் செய்ய திட்டங்களை வகுத்துள்ளனர். ஆனால் நிதி ஒதுக்கவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கு நிதி ஒதுக்க வேண்டும். மேகதாது அணை கட்டினால் தமிழகம் வறண்டு விடும் மேகதாதுவில் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டக்கூடாது என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது பாமக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஸ்வரன், அரசாங்கம், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன், நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் எம்பி செந்தில், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் வேலுசாமி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்கச் செயலாளர் முருகசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.



