தருமபுரி, ஆகஸ்டு 12 –
தருமபுரி மாவட்டம் மிட்டா ரெட்டி அள்ளி முதல் பொம்மிடி வரை இணைப்பு சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தருமபுரி மாவட்ட செயலாளர் கலைச் செல்வன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஸ்வரன், கமலா மூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
தருமபுரி மாவட்டம் மிட்டா ரெட்டி அள்ளி கோம்பேரி முதல் காளிக்கரம்பு வரை 1,500 மீட்டர் நீளத்திற்கு ஏற்கனவே போக்குவரத்து பயன்பாட்டிற்கு இருந்த சாலையை தார் சாலையாக விரிவுபடுத்தி மிட்டா ரெட்டி அள்ளி முதல் பொம்மிடி வரை இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



