ஈரோடு, அக். 8
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன். ஜெயராமன், பொதுச் செயலாளர் வினோத் குமார், பொருளாளர் விஜய் மனோகரன் ஆகியோர் கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அதில், இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான உதவியாளர் முன்னுரிமைப் பட்டியலில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ல் நேரடி நியமனம் பெற்ற உதவியாளர்களின் தகுதிகாண் பருவம், துறைத் தேர்வுகள் மற்றும் அடிப்படைப் பயிற்சி உள்ளிட்ட நிபந்தனைகளை கருத்தில் கொள்ளாமல் முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்திருப்பது விதிமீறல் என சங்கம் தெரிவித்துள்ளது.எனவே, தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள முன்னுரிமைப் பட்டியலை ரத்து செய்து, விதிகளின்படி புதிய முன்னுரிமைப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


