தஞ்சாவூர், ஆகஸ்ட் 7 –
தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இணைய கல்வி கழகம், உயர்கல்வி துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு என்கின்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கவிஞர் யுக பாரதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: எல்லோருக்கும் எல்லாமே என்பதே தமிழனின் கனவு கல்வெட்டுகள் உள்ளிட்டவை மூலமாக நம் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நம் வரலாற்றையும் நம்முடைய பெருமையையும் எவ்வளவு அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் வெற்றியாளராக மாற முடியும். தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தால் வெற்றியாளராக மாற முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம். கனவு என்பதே நம்முடைய விருப்பத்தின் விளைவு. எனவே நாம் என்னவாக வேண்டும் என கனவு கண்டு அதை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்றார் யுக பாரதி.
மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி தமிழ் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. தமிழ் பெருமிதம் சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டி பெருமித செல்வி, பெருமித செல்வன் என பட்டம் சூட்டி சான்றிதழும், பரிசும், சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களை பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் என பட்டம் சூட்டி சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் அமுதா, பாரத ஜோதி, பதிவாளர் (பொ) பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.