திருப்பூர், ஜூலை 21 –
பெருமாநல்லூர் வருகை தந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவிநாசி அடுத்த நேதாஜி பார்க் தொழில் பேட்டை வளாகத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். பனியன் நிறுவனங்கள் செயல்படும் விதங்கள் குறித்து கேட்டறிந்தார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கிறதா என டவுட் உள்ளது. காமராஜர் குறித்த பல்வேறு உருவ கேலியை செய்தவர்கள் திமுகவினர். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலை ஆட்டி விடுவது போல சிவா மூலம் பேசிவிட்டு முதலமைச்சர் யோசித்து வருகிறார். காங்கிரஸ் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இல்லை. இருந்தால் தானே தெரிவிப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும் மோசமான நிலைக்கு நிறுவனங்கள் செல்வதன் காரணமே மின் கட்டண உயர்வு தான். மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கை. ஒரு டி.எஸ்.பிக்கு இந்த நிலை என்றால் மற்ற காவலர்கள் எப்படி பணியாற்றுவார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்மவீரர் காமராஜர் குறித்து பல்வேறு விதமாக அவதூறு பேசியவர்கள் திமுகவினர். இன்று இது பெரிதாகி மக்கள் கோபமடைந்த உடன் விசிகவினர் இதனை பெரிது படுத்த வேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இது குறித்து எதுவும் பேசவில்லை. அந்த அளவு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் செயலிழந்து கூட்டணியில் நீடிக்க வேண்டும் என உள்ளது.
திருவள்ளூர் பாலியர் வன்கொடுமை தொடர்பாக ஏழு நாட்கள் ஆன நிலையிலும் யாரும் சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. சாரி என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு போய்விடுவார். திமுகவால் மக்கள் காவல்துறை மீதும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு இதுவே சான்று.
ஐந்து முறை ஆட்சியில் இருந்த கட்சி ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் கட்சி ஒவ்வொரு அணியில் தமிழ்நாடு முகாமில் இணைந்தால் மட்டுமே ஆயிரம் உரிமைத் தொகை என பகிரங்கமாக தெரிவித்து வலுக்கட்டாயமாக மக்களை கட்சியில் சேர்த்து வருகின்றனர். இப்படித்தான் பணப்பட்டுவாடா செய்வோம் என பல்லடத்தில் திமுகவினர் தெரிவிக்கின்றனர். கூவி கூவி மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களை சேர்த்து வருகின்றனர் என விமர்சித்தார். மேலும் திருப்பூர் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளது வேதனை அளிப்பதாகவும் இந்த தேர்தல் சட்டம் ஒழுங்கை மையப்படுத்தும் தேர்தலாக இருக்கும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், தற்போது புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. அங்கு நாங்கள் வேலைவாய்ப்பு பெருக்கவும் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். அதற்காக கோவை மற்றும் திருப்பூரில் இருக்கக்கூடிய பொருளாதார நிலையங்களை நிறுவனங்களை பார்வையிடுகிறோம். இதில் சிறிய உற்பத்தி நிறுவனங்கள் முதல் ஸ்பின்னிங் மில்கள் நிட்டிங் தொழில் என அனைத்தையும் பார்வையிடுகிறோம். எனது சொந்தத் தகுதியான சம்பல்பூருக்காக இங்குள்ள தொழில் நிறுவனங்கள், நிலையை தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் என்னுடைய சொந்த மாநிலமான ஒடிசாவுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது. ஒடிசா இளைஞர்கள் இங்கு நிறைய பேர் வேலை செய்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்திலும் தமிழ்நாட்டின் பொருளாதரத்திலும் அவர்கள் பங்கு வகிக்கிறார்கள். இங்கு அவர்கள் கற்றுக் கொண்ட அனுபவங்களை பற்றி கேட்டறிந்தேன். இரு மாநிலத் தொடர்புகள் பற்றியும் புதிய விஷயங்களையும் கேட்டறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். பாலக்காட்டுக்கு செல்லும் வழியில் திருப்பூர் மற்றும் கோவை பார்வையிட்டு செல்கிறேன் என தெரிவித்தார்.