தஞ்சாவூர், ஜூலை 1 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டுக்கான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், கோட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள், தீர்வு காணப்பட்ட வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவிக்தொகைகளை பெற்று தருதல் உள்ளிட்டவைகள் குறித்தும், மக்களிடையே வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம், தாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள், பெண் கல்வி ஊக்கத்தொகை, அயோத்தி தாஸ் பண்டிதர் மேம்பாட்டு குடியிருப்பு திட்டம், ஆதி திராவிடர் குடியிருப்புகளின் அடிப்படை வசதிகள், இலவச வீட்டு மனை பட்டா, சாதி வேறுபாடற்ற மயானம், வன்கொடுமை தீருதவி போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் போலீசார் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்குச் சென்று மாணவர் மாணவிகளிடையே கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சப் கலெக்டர் ஹிருத்யா விஜயன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, அனைத்து துணை போலீஸ் கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், அனைத்து ஆதி திராவிடர் நல தனி தாசில்தார்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.