தஞ்சாவூர், அக்டோபர் 21 –
தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவை முன்னிட்டு பந்தகால் நடும் விழா நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் மற்றும் முடி சூட்டிய நாள், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 30ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பெரிய கோவிலில் இன்று காலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. முன்னதாக பந்தக்காலுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் கவிதா, கோவில் செயல் அலுவலர், கண்காணிப்பாளர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



