தஞ்சாவூர், ஜூன் 18 –
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் ரூபாய் 19 கோடி மதிப்பிட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பழமை மாறாமல் உலக தரத்தினால் ஆன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரசுவதி மகால் நூலகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் சரசுவதி மகால் நூலக கட்டிடம் அதன் பழமை மாறாமல் புனரமைப் புமைக்கப்பட்டு வருகிறது. இதில் பழுதடைந்த சுவர்கள், மேற்கூரைகள், வளைவுகள் மற்றும் தளங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மழை நீர் உட்புகாத வகையில் மேற்கூரைப் பகுதியில் ஓடுகள் அமைத்தல், பாரம்பரிய முறையில் டைல்ஸ் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நூலகத்தின் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய பழங்கால ஓலைச்சுவடிகள், நூல்கள் மற்றும் அவை தலைப்புகளில் வகைப்படுத்தி பராமரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நாள்தோறும் நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், அடிப்படை வசதிகள் நூல் மற்றும் நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நூலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொது மக்களின் வசதிக்காக நடைபாதைகள் மேற்படுத்தும் வகையில் புதிதாக கருங்கல் தளம் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும், உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும், தேவையற்ற பொருட்களை அகற்றி பழமை மாறாமல் புதிய பொலிவுடன் உலக தரத்திலான நூலக அனுபவத்தை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நூலகத்தின் வாசகர் பிரிவு, அருங்காட்சியகம், விற்பனை பிரிவு, ஒளி, ஒலி காட்சிகள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பாடுகள் குறித்தும், தர்பார் அரங்கத்தை பார்வையிட்டு, அதன் வரலாற்று சிறப்புகள் மற்றும் பாரம் பரிய பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். பின்னர் அரசர் மேல்நிலைப் பள்ளியிலும், கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் (தொல்லியல் துறை) தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் ரஞ்சித், உதவி பொறியாளர்கள் கேசவன், மயில்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



