தஞ்சாவூர், ஆகஸ்ட் 11 –
தஞ்சாவூர் அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தைல காப்பு சாட்டப்படுகிறது.
இந்தக் கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்வார்கள். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடி மாதம் முத்துபல்லக்கு பெருவிழா, பால்குட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் 101-வது ஆண்டாக மாரியம்மனுக்கு பால்குட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாரியம்மன் கோவில் வளைவு பகுதியில் உள்ள சிவன் கோவில் இருந்து நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், நாலு ராஜ வீதிகள் வழியாக மாரியம்மன் கோவில் சென்றடைந்தனர். பின்னர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து உற்சவ அம்மனுக்கும், துர்க்கை அம்மனுக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு முத்து பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.



