தஞ்சாவூர், ஆகஸ்ட் 1 –
தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு குறித்த முகாமை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறை குறித்த முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த முகாமில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பராமரிக்கும் வழிமுறைகள் குறித்த விளக்கங்களை அரசு துறை அலுவலர்கள் மூலம் தனியார் நிறுவனங்களின் வழியாக எடுத்துரைக்கப்பட்டது.
வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமான நடமாடும் பழுது நீக்கம் எந்திரத்தின் (மொபைல் சர்வீஸ் யூனிட்) மூலம் முகாமில் பங்கேற்ற விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிறு, சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த செயல் விளக்கங்களை அறிந்து பயன் பெற்றனர். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சிவப்பிரகாஷ், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.