தக்கலை, ஆக. 20 –
தக்கலை அருகே மேக்காமண்டபம் கைலாசவிளை பகுதியை சேர்ந்தவர் மணி (60). இவருக்கு மனைவி ஒரு மகள் உண்டு. மணி குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேக்காமண்டபம் சந்தை பகுதியில் உள்ள கடை திண்ணைகளில் தான் இரவு தூங்குவது வழக்கம். அவ்வப்போது சந்தையில் கூலி வேலைக்கு சென்று அந்த பணத்தில் பிழைப்பு நடத்தினார்.
நேற்று இரவு மீன் சந்தையில் படுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மேக்காமண்டபம் சந்தை அருகில் உள்ள ஆலமரத்தின் கீழ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மணி இறந்து கிடந்தார். இது குறித்து சந்தைக்கு வந்த வியாபாரிகள் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தக்கலை, கொற்றிகோடு காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதை தொடர்ந்து இறந்து கிடந்த மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இரவு நேரத்தில் குடிபோதையில் இந்த பகுதியில் கும்பல்கள் நடமாடுகிறார்கள். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். எனவே போதை கும்பல் தான் மணியை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்க வேண்டும் என்றனர். மணியிடம் பணம் கேட்டு கொடுக்க மறுத்ததால் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக கொற்றிக் கோடு போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் தான் நேற்று இரவு மணியிடம் தகராறு செய்ததை சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.



