ஈரோடு, ஆக 4 –
தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பின் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு மாநாடு ஈரோட்டில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இயக்க செயலாளர் குமார், செயலாளர் கோதண்டபாணி, துணை செயலாளர்கள் பழனிச்சாமி, மோகன் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: தகவல் பெறும் உரிமை சட்டத்தை உயர் கல்வி மற்றும் கல்லூரிகளில் கட்டாய பாடத்திட்டமாக அமைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகத்தில் நடமாடும் இடைத்தரகர்கள், போலி ஆவண எழுத்தர்கள், போலி வழக்கறிஞர்கள், மேலும் இதன் அருகில் செயல்படும் போலி அலுவலகங்களை ஆய்வு செய்து அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கான விவசாய மின் இணைப்புகளை தாமதம் இன்றி மின் வாரியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் வழங்கும் விவசாயிகளுக்கான அனைத்து சலுகைகளையும் நேரடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு தகவல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்பட மேல் முறையீட்டாளர்களின் மனுக்களை உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும். சேவை உரிமை சட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.