சேலம், ஜூன் 30 –
சேலம் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியானது கால்நடை பராமரிப்பு துறையின் மூலமும், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடனும் 1.7.2026 முதல் வரும் 10.8.2026 முடிய சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.
கோமாரி நோய் என்பது இரட்டை குழம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும் நச்சு உயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணை கழிவுகள் மூலமும் இந்த நோய் பரவுகிறது. கோமாரி நோயினால் மாடுகள் சினை பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளின் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர்க்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்த கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தில் உள்ள அனைத்து மாடுகள் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில். 1.7.2026 முதல் 10.8.2026 முடிய அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் நான்கு மாத வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள கால்நடை மருந்தகப் பகுதிகளில் 149 குழுக்கள் மூலம் முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து ஒன்பதாவது சுற்று “கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி” போடும் பணி நடைபெறுகிறது.
எனவே விவசாயம் செய்பவர்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நாளினை தவறாது அறிந்து தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு
பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.


