மதுரை, ஜூலை 21 –
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் S. குருசங்கர் இந்த மாநாட்டு நிகழ்வு குறித்து கூறியதாவது: தமிழ்நாட்டின் மிக பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதயவியல், மின் உடலியங்கியல் & இதயத்துடிப்பு மேலாண்மை துறை, சீரற்ற இதயத்துடிப்பு (அரித்மியா) மற்றும் இதய செயலிழப்பு மீது 4-வது வருடாந்திர மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துகிறது.
இந்நிகழ்வில் அவசர நிலை மருத்துவ சிகிச்சை, மயக்க மருந்தியல் ஆகிய பிரிவுகளில் பயிலும் 200 முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பணியாற்றி வரும் மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் நிகழ்வாக நடைபெறும் இம்மாநாட்டில் சிறப்பு வல்லுநர்களின் உரைகளோடு நிபுணர்கள் பங்கேற்கும் 10-க்கும் அதிகமான விவாத அமர்வுகள் நடைபெறவுள்ளன. இதயவியல் துறையில் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பெல்லோஸ் தகுதிநிலை மருத்துவர்களுக்காக நேரடி பயிலரங்குகளும் இந்நிகழ்வின் அங்கமாக நடத்தப்படும்.
தேசிய அளவில் புகழ்பெற்ற மின் உடலியங்கியல் நிபுணர்கள் (electrophysiologists) வழங்கும் சிறப்பு விளக்கவுரைகள் இந்நிகழ்வில் முக்கிய இடம் பெறுகின்றன. இசிஜி, பேஸ்மேக்கர்கள், இதய செயலிழப்பு, மின் உடலியங்கியல் ஆய்வு சுட்டிக்காட்டல்கள் மற்றும் சமீப ஆண்டுகளில் 30-40 வயது பிரிவிலுள்ள நபர்கள் மத்தியில் திடீரென ஏற்படும் இதய செயலிழப்புகள் மற்றும் இதய உயிரிழப்புகளின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியிருக்கிறது. 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வயது பிரிவில் இத்தகைய கடும் பாதிப்பு நிகழ்வுகள் மிக அரிதானவையாக இருந்தன. இது கடுமையான கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
அதிகமான மனஅழுத்தம் மற்றும் பணிச்சுமையை எதிர்கொள்கிற பணியாளர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டுமென்ற எச்சரிக்கை அழைப்பாக இது கருதப்பட வேண்டும். இந்த மாநாட்டு நிகழ்வில் விவாதிப்பதற்காக நடப்பு காலகட்டத்தில் முக்கியமான தலைப்புகளை மிக கவனமாக தேர்வு செய்திருக்கிறோம். மேலும் மருத்துவ வல்லுநர்கள் இடம் பெறும் கலந்துரையாடல் அமர்வுகளின் வழியாக கவலை ஏற்படுத்தும் இப்பிரச்சனைகளுக்கு பதில்களை கண்டறிவது எமது நோக்கமாகும்.
திடீர் இதய உயிரிழப்பு மற்றும் அது நிகழாமல் தடுப்பது, இதயத்துடிப்பு நின்று உருவாகும் மயக்க நிலைக்கான அணுகுமுறை யாருக்கு மின் உடலியங்கியல் (EP) தேவைப்படுகிறது, இதய செயலிழப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள், பேஸ்மேக்கர்-ன் அடிப்படை அம்சங்கள் மற்றும் அதன் பரிமாண வளர்ச்சி போன்ற அவசரமான மிக முக்கியமான பிரச்சனைகள் மீது விவாதங்களும், கலந்துரையாடல்களும் நடைபெற உள்ளது என்று கூறினார்.